வாழ்த்துரை
“மாற்றம்ஒன்றேமாறாதது” என்பதை நாம் அறிவோம். இந்த உலகம் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கிறது. மாற்றம் ஒன்றே பல புதிய நிகழ்வுகளை உருவாக்கும். மனிதன் தன் பழைய சிந்தனை, சொல், செயல் ஆகியவற்றிலிருந்து மாறும் போது புதிய மனிதனாக உருவாகிறான். அதைத்தான் நூலின் ஆசிரியர் ஒவ்வொரு தலைப்பிலும் சொல்லியிருக்கிறார். புத்தகத்தின் பெயரே என்னை மிகவும் ஈர்த்துவிட்டது. ஒவ்வொரு தலைப்பிலும் சொல்லியிருக்கும் கருத்துக்களோ அருமையோ! அருமை! தேனில் கலந்த, பலா போல என்ன சுவை! என்ன சுவை! தித்திப்பாய் இருக்கின்றன. இந்நூல் பல கேள்விகளை என்னுள்ளே எழச் செய்து சிந்திக்கவும் வைத்து, என்னுள் பல மாற்றங்களை ஏற்படுத்தியது.
என் அன்புச் சகோதரர் இருதயராஜ். சொல் பேசி, பொன்முறுவல் பூத்து நட்பு பாராட்டி பழகக் கூடிய நல்ல மனிதர். அவருடைய அடக்கம், எளிமை, தெளிவானப் பார்வை, ஆழமாக சிந்திக்கும் திறன், மற்ற நபர்களை மதிக்கும் பண்பு, மற்றவர்களின் எண்ணங்களை உள்வாங்கும் மனப்பக்குவம், அவர் பெற்ற பல்வேறு துறை அனுபவங்கள் ஆகியவை அவர் எழுதிய ஒவ்வொரு புத்தகத்திலும் தெளிவாக தெரிகின்றன. தான் சொல்ல வந்த கருத்துக்களை தெள்ளத் தெளிவாக தெளிந்த நீரோடை போல, ‘மாறவேநான்ஆசைப்படுகிறேன்’ என்ற இந்நூலின் வழியே பிரதிபலிக்கும் கண்ணாடியாக காட்டியிருக்கிறார். எந்த தலைப்பிலும் தொய்வில்லை தெளிவு தான் தெரிகின்றது.
தன் அன்றாட அனுபவங்களையும், சந்தித்த நபர்களையும் மேற்கோள் காட்டி ஒவ்வொரு தலைப்பையும், அதற்கு ஏற்ற கருத்துக்களையும் செதுக்கியிருக்கிறார். முதல் தலைப்பில் தான் செய்யும் வேலையில் தீரா காதல் கொள்ள வேண்டும். காதல் எப்படி பேரார்வம் ஏற்படுத்தும் என்பதில் தொடங்கி, அன்பில் நிலைத்திருப்பது காதல், பண்பில் நிலைத்திருப்பது பெருங்காதல் என முடித்திருக்கிறார்.
தீர்மானங்கள் பற்றி சொல்லி இருப்பதும் அருமை. மனதின் வலிமை பற்றி கூறி எளிமை கலந்த வலிமை, பிறர் மனதில் நமக்கான புன்னகையை ஏற்படுத்தும். வலிமை கலந்த எளிமை தான் நம்மை அதிக உயரத்திற்கு இட்டுச் செல்லும். நமக்கு இருக்கும் வலிமையில் எளிமை கலக்கும்போது அது பக்குவம். ‘வலிமை நம்முள் வாழட்டும் எளிமை நம்மை ஆளட்டும்’ என இந்நூலை இயற்றி இருக்கிறார்.
இவ்வாறாக ஒவ்வொரு தலைப்பிலும் அவரின் எழுத்தாழமும், எண்ணத்தின் ஓட்டங்களும் அழகாய்த் தெரிகின்றன. ‘எல்லா நாளும் நமக்கான நாளாய் முடியட்டும்’ என இந்நூலின் முடிவில் முற்றுப்புள்ளி வைத்திருப்பது தன்னம்பிக்கையின் வெளிப்பாடாய் தெரிகின்றது.
எனது இனிய அன்பர், ஆங்கில நூலை தமது தாய் மொழியான தமிழில் மொழிமாற்றம் செய்து புத்தகமாக எழுத எடுத்திருக்கும் முதல் முயற்சியிலேயே மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். அவர் எண்ணங்கள் சிறப்படைந்து, முயற்சிகள் வெற்றி மாலைகள் சூட்டி, மென்மேலும் பற்பல காவியமாக நூல்களைப் படைத்து, வாழ்வில் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனின் ஆசிரோடு வாழ்த்துகின்றேன்.
Bro. Arokia Sahayaraj P.
Principal & Correspondent
Montfort School
Yercaud